ரஷ்யாவில் 10 வயது மாணவரை குத்திக் கொன்ற இளைஞர் : விசாரணையில் வெளியான தகவல்!
ரஷ்யாவில் உள்ள பாடசாலையொன்றில் 10 வயது மாணவர் ஒருவர் பிற மாணவரால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று கோர்கி-2 (Gorki-2) கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது 15 வயதுடைய சிறுவன் பாதுகாப்பு அதிகாரிகளை காயப்படுத்தியதாகவும், 10 வயது சிறுவனை குத்தி கொன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்தேக நபரை கைது செய்ய ஆயுதமேந்திய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஏராளமான மாணவர்கள் பாதுகாப்பு இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரின் உடமையில் வெடிப்பு சாதனம் ஒன்று காணப்பட்டதை தொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
குறித்த இளைஞர் ‘ஒரு அழிவுகரமான இளைஞர் இயக்கத்தின் ஆதரவாளர்’ என்று நம்பப்படுவதாகவும், ‘உயிர்கள் முக்கியமில்லை’ என்ற வாசகம் அச்சிடப்பட்ட மேற்சட்டையை அவர் அணிந்திருந்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.





