அரசியல் இலங்கை செய்தி

அனர்த்த முகாமைத்துவ கூட்டுப் பொறிமுறையை உருவாக்குவது குறித்து ஆராய்வு!

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையின் 16 ஆவது அமர்வு இன்று (15) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

தேசிய அனர்த்த முகாமைத்துவ கூட்டுப் பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் 2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தை திருத்துவது தொடர்பான பத்திரம் இதன் போது சமர்ப்பிக்கப்பட்டது.

பல்தரப்பு அணுகுமுறை மூலம் தோட்டப் பகுதிகளில் மண்சரிவு அபாயத்தைக் குறைப்பதற்காக, NBRO உட்பட தொடர்புடைய தரப்பினர்கள், தோட்ட உரிமையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, வடிகாலமைப்புப் பொறிமுறையை நிறுவுதல் மற்றும் மறுசீரமைப்பு செய்வதற்கான பொறிமுறையொன்றை நிறுவுதல் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்து, கிடைத்துள்ள அனைத்து வெளிநாட்டு நிவாரண உதவிகளையும்  ஒருங்கிணைப்பதற்காக வெளிநாட்டு நிவாரண ஒருங்கிணைப்பிற்கென குழுவொன்ற நிறுவுவது குறித்தும் அதற்கு அதிகாரம் வழங்குவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

ஜனாதிபதியின் தலைமையில் தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை 7 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் 07 ஆம் திகதி கூடியது.திடீர் அனர்த்த நிலைமையுடன் கடந்த நவம்பர் 27 ஆம் திகதி இரவு மீண்டும் சபை கூடியது.

டித்வா சூறாவளிக்குப் பிறகு இயல்பு நிலைமையை மீள ஏற்படுத்தத் தேவையான கொள்கை முடிவுகளை எடுப்பதற்கும் நிறுவன வழிகாட்டுதலை வழங்குவதற்கும் ஜனாதிபதியின் தலைமையில் இந்த சபை இன்று கூடியது.

டித்வா சூறாவளியால் நாடு முழுவதும் 2.2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,164 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.112,110 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

அதன்படி, 796 பராமரிப்பு நிலையங்களில் 72,911 பேர் தங்கியுள்ளனர் (14.12.2025), என்று அனர்த்த முகாமைத்துவ நிலையப் பணிப்பாளர் நாயகம் இங்கு தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணம், மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்புதல், இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம் என்பன குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கான நிரந்தரத் தீர்வைக் காணும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், தாக்கம் ஏற்படக் கூடிய வலயங்களில் உள்ள 15,000 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த மக்களுக்காக 8,000 வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

அந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இந்த வாரத்திற்குள் அதற்கான நிதியை பூரணமாக செலுத்தி முடிக்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தரவுகளைச் சேகரித்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் அதற்கான சட்ட கட்டமைப்பின் அவசியம் குறித்தும் இதன் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்த நடவடிக்கைகளுக்கு முறையான செயல்முறையின் அவசியம் குறித்து ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கவனம் செலுத்தினர்.

நடைமுறைச் சாத்தியமான வேலைத்திட்டத்தின் மூலம் அடுத்த 03 ஆண்டுகளுக்குள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

2016 ஆம் ஆண்டு வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடாக மக்களுக்கு 7.51 பில்லியன் ரூபா வழங்கப்பட்ட போதிலும், 1.42 பில்லியன் ரூபாவுக்கான மீளமைப்பு செயற்பாடுகளே இடம்பெற்றுள்ளன.

இதனால் அரசாங்கத்திற்கு 5.79 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அடையாளங் கண்டுள்ளது எனவும் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பாதுகாப்புப் படைப் பிரதானிகள் மற்றும் அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Sanath

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!