முகாம்களில் தங்கியுள்ள 7000 மக்களை 03 மாதங்களில் மீள் குடியேற்ற தீர்மானம்!
இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 7000 மக்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
டித்வா புயலால் சேதமடைந்த பகுதிகளை புனரமைப்பது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், 6,138 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு சிறிது நேரம் எடுக்கும் என்றும் கூறினார்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) தரவுகளின் அடிப்படையில், பகுதியளவு சேதமடைந்து ஆபத்தில் இல்லை என மதிப்பிடப்பட்ட வீடுகள் ஆய்வு செய்யப்படும் என்றும், அந்த வீடுகளில் வசித்தவர்களை மீள்குடியேற்றுவதற்கான செயல்முறை விரைவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டவர்களை மீள்குடியேற்றுவதே முக்கிய சவால் எனக் கூறிய அவர், இந்தப் பிரச்சினையை விரைவாக நிவர்த்தி செய்ய ஒரு சிறப்பு நடவடிக்கைக்கு அரசு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
நிலத்தை இழந்தவர்களை மீள்குடியேற்றுவதற்கு வசதியாக அரசுக்குச் சொந்தமான நிலங்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை நிவாரணப் பொருட்கள் விநியோகம் அல்லது அத்தியாவசிய சேவைகள் பற்றாக்குறை தொடர்பான ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் 1904 ஹாட்லைன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.





