பெலாரஸில் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட கைதிகளை ஏற்ற உக்ரைன்!
“உளவு பார்த்தல், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம்” உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 123 பேரை பெலாரஸ்ய அரசாங்கம் நேற்று விடுவித்துள்ள நிலையில் அவர்கள் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
விடுவிக்கப்பட்ட கைதிகளில் இரண்டு முக்கிய பெலாரஷ்ய ஆர்வலர்கள், நோபல் பரிசு வென்ற அலெஸ் பியாலியாட்ஸ்கி (Ales Bialiatski) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மரியா காலெஸ்னிகாவா (Maria Kalesnikava) ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதிகளில் 114 பேர் உக்ரைனுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஒன்பது பேர், லிதுவேனியாவுக்கு மாற்றப்பட்டதாக உக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பெலாரஷ்ய அரசாங்கம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெலாரஷ்ய பொட்டாஷ் (potash) தொழில் மீதான தடைகளை அமெரிக்கா நீக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பெலாரஸுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ஜான் கோலே (John Coale), ஐரோப்பிய நாட்டின் மிகப்பெரிய அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் ஒன்றான பெலாரஷ்ய பொட்டாஷ் உற்பத்தியாளரான பெலாரஸ்கலிக்கு எதிரான தடைகளை அமெரிக்கா நீக்குவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் பெலாரஸுக்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவதே குறிக்கோள் என்றும், எதிர்காலத்தில் “கூடுதல் தடைகள் நீக்கப்படும்” என்றும் கோலே கூறியுள்ளார்.




