சுற்றுலா செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் – NBRO எச்சரிக்கை!
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடுமுழுவதும் ஆபத்தான சூழ்நிலையில் இருப்பதால், பொதுமக்கள் பயணங்கள் மற்றும் சுற்றுலாக்களைத் தவிர்க்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் (NBRO) மூத்த புவியியலாளர் டாக்டர் வசந்த சேனாதீர அறிவுறுத்தியுள்ளார்.
ஊடகங்களுக்குப் கருத்து வெளியிட்ட அவர், நான்கு மாவட்டங்களில் உள்ள 33 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட நிலச்சரிவு சிவப்பு அறிவிப்புகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அபாயங்கள் இருந்தபோதிலும், வார இறுதி சுற்றுலாக்களுக்குச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பொதுமக்களிடமிருந்து அழைப்புகள் வருவதாக சுட்டிக்காட்டிய அவர் தற்போதைய பேரிடர் சூழ்நிலையில், மக்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயம், தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து பாதுகாப்பான இடங்களில் தங்குவதுதான் என்றும் வலியுறுத்தினார்.
இதேவேளை கடந்த சில நாட்களாக பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மீகஹகிவுல மற்றும் டெமோதராவில் நேற்று (11) நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளது. இது நிலைமையின் தீவிரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
நவம்பர் 20 முதல் இன்று (12) வரை, NBRO ஆபத்தான இடங்களை ஆய்வு செய்ய 2,716 கோரிக்கைகளைப் பெற்றுள்ளது, அவற்றில் 589 ஆய்வுகள் இதுவரை முடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





