வெனிசுலா கடற்கரையில் மிகப்பெரிய எண்ணெய் டேங்கரை கைப்பற்றியது அமெரிக்கா
வெனிசுலா கடற்கரைக்கு அருகில் இருந்த ஒரு எண்ணெய் டேங்கரை அமெரிக்கப் படைகள் கைப்பற்றியதால், நிக்கோலஸ் மதுரோ அரசாங்கத்திற்கு எதிரான வொஷிங்டனின் அழுத்த நடவடிக்கைகள் மேலும் தீவிரமடைந்துள்ளன.
“இதுவரை கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய டேங்கர்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அரசு வெளியிட்ட காட்சிகளில் ஆயுத வீரர்கள் கப்பலில் ஏறுவது தெரிகிறது.
இந்த டேங்கர் வெனிசுலா மற்றும் ஈரானில் இருந்து அனுமதிக்கப்பட்ட எண்ணெயை எடுத்துச் சென்றதாக அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி தெரிவித்துள்ளார்.
கராகஸ் இந்த நடவடிக்கையை “சர்வதேச கடற்கொள்ளை” என கடுமையாக விமர்சித்தது. அதற்கு முன்னர் வெனிசுலா ஒருபோதும் “எண்ணெய் காலனி” ஆகாது என மதுரோ, வலியுறுத்தியிருந்தார்.
வெனிசுலா அமெரிக்காவுக்கு போதைப்பொருள் அனுப்புவதாக குற்றம் சுமத்தி, ட்ரம்ப் நிர்வாகம் அண்மைய மாதங்களில் மதுரோவை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இதேவேளை, உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளைக் கொண்ட நாடான வெனிசுலா, அமெரிக்கா தன் வளங்களை கைப்பற்ற முயல்கிறது என எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
டேங்கர் கைப்பற்றப்பட்டதன் பின்னர், குறுகிய கால விநியோக அச்சங்களைத் தூண்டும் வகையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுக்கு அபாயம் என்றும் வெனிசுலாவின் ஏற்கனவே சீர்குலைந்த எண்ணெய் ஏற்றுமதியை மேலும் பாதிக்கக்கூடும என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
வியாழக்கிழமை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மதுரோவுடன் பேசியதாகவும், அதிகரித்துவரும் வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் மாஸ்கோ தனது ஆதரவை உறுதி செய்ததாகவும் கிரெம்ளின் தெரிவித்துள்ளது.




