அமெரிக்கா, கனடாவில் இலட்சக்கணக்கானோருக்கு வெளியேற்ற உத்தரவு.
அமெரிக்கா மற்றும் கனடாவின் பசிபிக் வடமேற்குப் பகுதிகளில், ‘அட்மாஸ்பியரிக் ஆறு’ (atmospheric river)எனப்படும் நீராவி நீரோட்டம் காரணமாகப் பெய்து வரும் கனமழையால், வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. அமெரிக்காவின் ஒரிகன் மற்றும் வாஷிங்டன் மாநிலங்களில், ஸ்காகிட் மற்றும் ஸ்னோஹோமிஷ் ஆறுகளின் பகுதிகளில் பேரழிவுகரமான வெள்ளம் ஏற்படலாம் என வானிலை சேவை எச்சரித்துள்ளது.
வாஷிங்டன் ஆளுநர் பாப் ஃபெர்குசன் நேற்று மாநில அவசரநிலையைப் பிரகடனம் செய்துள்ளார். சுமார் ஒரு இலட்சம் மக்கள் விரைவில் வெளியேற்ற உத்தரவுகளை எதிர்கொள்ளக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அண்டை நாடான கனடாவில், வான்கூவருக்குச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகள் வெள்ளம், பனிச்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோருக்கு வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
கனமழை இன்று (வியாழக்கிழமை) பிற்பகலுக்குள் குறையும் என எதிர்பார்க்கப்பட்டாலும், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒரு புயல் தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




