23 பேருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து! சாரதிக்கு அதிரடி தண்டனை
மொனராகலை பகுதியில் கடந்த 27ஆம் திகதி பெய்த அடைமழை காரணமாக கும்புக்கன் ஓயா நிரம்பி வழிந்ததால், வெல்லவாய – கொழும்பு பிரதான வீதியின் கும்பக்கன் பகுதி நீரில் மூழ்கியது.
இதன்போது, 23 பயணிகளுடன் வெள்ள நீரோட்டத்தை பொருட்படுத்தாமல் சாரதி பேருந்தை செலுத்தியதில் பலரது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருந்தது.
எனினும், உடனடியாக செயற்பட்ட மீட்புக் குழுவினர் பேருந்தில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டதுடன், பேருந்தையும் வெள்ளத்தில் இருந்து மீட்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்த நிலையில், கும்புக்கனை பகுதியில் வெள்ள நீரைக் கடந்து செல்ல முயன்று பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்த மொனராகலை – கொழும்பு பஸ் தொடர்பாக தேசிய போக்குவர்த்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, பஸ் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் நேற்று (03) தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டனர்.
ஊழியர்களின் தவறான நடத்தை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பஸ் போக்குவரத்து சேவைக்கான அனுமதி இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.
மேலும், சாரதியும் நடத்துனரும் ஒரு மாத காலத்திற்கு சேவையிலிருந்து பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.





