ஐரோப்பிய நாடொன்றில் புலம் பெயர் தொழிலாளர்கள் பலர் கைது!
ஏறக்குறைய 300 தொழிலாளர்களை நாட்டிற்குள் சட்ட விரோதமாக கடத்திய குற்றக்கும்பலொன்றை ஸ்பெயின் காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
பெரும்பாலான தொழிலாளர்கள் நேபாளத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு நாடு கடத்தப்பட்ட தொழிலாளர்கள் மத்திய மற்றும் கிழக்கு ஸ்பெயினில் உள்ள பண்ணைகளில் பணியமர்த்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 322 தொழிலாளர்களில் 294 பேர் ஸ்பெயினில் வசிக்கவும் வேலை செய்யவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பெரும்பாலானவர்கள் சுற்றுலா விசாக்களின் கீழ் நாட்டிற்குள் நுழைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் சுகாதாரமற்ற வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்ததாகவும், சம்பளம் உள்ளிட்ட கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
அவர்களிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




