மாவீரர் தின நினைவுகூரல் அனுமதியை மூடிமறைக்கவே லண்டனில் போராட்டம்!
மாவீரர் தினத்தை நினைவுகூர இடமளிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மூடிமறைக்கும் நோக்கிலேயே லண்டனில் போலி ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டினார்.
ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு எதிராக லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் சிலர் நடத்திய போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.
“ மேற்படி போராட்டத்தையடுத்து புலிகளின் எதிர்ப்புக்கு ஜே.வி.பி. அரசாங்கமும் ஆளாகிவிட்டதென சிலர் நினைக்கலாம்.
இது கொள்கை தொடர்பான எதிர்ப்பு அல்ல. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் காசு வாங்கும்போது, வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டிருக்கலாம்.
மறுபுறத்தில் தொல்லியல் திணைக்களத்தின் பெயர் பலலைகள் அகற்றப்படுகின்றனர். மாவீரர் தினத்தை நினைவுகூர இடமளிக்கப்படுகின்றது.
எனவே, இதனை மூடிமறைப்பதற்காக போலி ஆர்ப்பாட்டம் உருவாக்கப்பட்டிருக்கலாம்.” எனவும் விமல்வீரவன்ச குறிப்பிட்டார்.





