UKவிற்கு மாணவர் விசாவில் வருகை தந்து அசேலம் கோருவோருக்கு எச்சரிக்கை!
பிரித்தானியாவிற்கு கல்வி கற்க வரும் மாணவர்கள் படிப்பின் முடிவில் புகலிடம் கோரும் முறை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்தின் இந்தோ-பசிபிக் அமைச்சர் சீமா மல்ஹோத்ரா (Seema Malhotra) இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், பிபிசி ஊடகத்திற்கு இது தொடர்பில் பேட்டியளித்துள்ளார்.
அதில் மாணவர்கள் தங்களின் படிப்பு முடிவடைந்தவுடன் புகலிடம் கோரும் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பில் கவலை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் புதிய குடியேற்ற சீர்த்திருத்தங்களின் கீழ், சில புலம்பெயர்ந்தோர் அங்கு நிரந்தரமாக குடியேற 20 ஆண்டுகள் காத்திருக்கு வேண்டும். மேலும் காலவரையற்ற விடுப்புக்கு தகுதி பெற 10 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.
2021 ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவிற்கு சென்று புகலிடம் கோரிய அனைவருக்கும் இந்த விதி பொருந்தும். புள்ளிவிபரங்களின்படி, சுமார் 2.6 மில்லியன் மக்களுக்கு இந்த விதி பொருந்தும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டில் மாத்திரம் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 16,000 சர்வதேச மாணவர்கள் இங்கிலாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளதாகவும், இது சட்டப்பூர்வ இடம்பெயர்வு வழிகளை துஷ்பிரயோகம் செய்ததற்கான சான்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த ஆண்டு ஜுன் வரையான காலப்பகுதியில் 14,800 மாணவர்கள் புகலிடம் கோரியதாக உள்துறை அலுவலகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டப்பூர்வ வழிகளில் விசா துஷ்பிரயோகத்தைக் கண்டிருக்கிறோம், அங்கு மக்கள் சட்டப்பூர்வமாகச் சென்று, பின்னர் விசாக்கள் நீட்டிக்கப்படாதபோது தங்கியிருக்க முயன்றுள்ளனர்,” என்றும் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.





