லண்டனில் ரில்வின் சில்வாவிற்கு எதிராக வெடித்த போராட்டம்!
லண்டனில் தமிழீழ தேசிய கொடிநாள் வாரத்தை முன்னிட்டு, நாடு கடந்த தமிழர் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பிரித்தானியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் நினைவு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இன்றையதினம் கொடிநாள் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது லண்டன் டிராபிளாகர் சதுக்கத்தில் (Trafalgar Square) தமிழர்கள் பெருந்திரளாகக் கூடி கொடிநாள் அனுஷ்டிப்பை கௌரவத்துடன் கொண்டாடினர்.
புலிக்கொடியை ஏந்தியவாறு மக்கள் பேரணியாக நகர்ந்ததுடன், சதுக்கத்தை நோக்கி அணிவகுத்து சென்றனர். பின்னர் தமிழீழ தேசியக் கொடி உயர்த்தப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
அனைத்து வயதினரும் ஒருங்கிணைந்து பங்கேற்ற இந்நிகழ்வு, தமிழர் சமூகத்தின் தேசிய உணர்வையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

,இதேவேளை தமிழர் தாயகத்திற்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் காலப்பகுதியில், தமிழின அழிப்பிற்கு பக்கபலமாக இருந்தவர்களும், தற்போதைய ஆட்சியில் பொறுப்பேற்று செயல்படுவோரையும் கண்டித்து லண்டனில் மாபெரும் தமிழ்த் தேசியப் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலையில் புத்தரின் பெயரை முன்வைத்து சிங்கள பெளத்த பேரினவாத அரசால் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், பிரித்தானியாவிற்கு பயணம் மேற்கொண்ட பேரினவாத அமைப்பான JVP/NPP சார்பான ரில்வின் சில்வாவின் வருகையை எதிர்த்து தீவிர கண்டன போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
தமிழீழ சுய நிர்ணய அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் பலர் பங்கேற்றனர்.

ரில்வின் சில்வாவின் ஐரோப்பிய சுற்றுப்பயணத்திற்கும், தமிழர் தாயகத்தை இலக்காகக் கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும், தமிழின அழிப்பை மறைக்கும் அரசியல் பொய்ப்பிரசாரத்திற்கும், எதிரான கோஷங்களும் கண்டனப் பதாகைகளும் எழுப்பப்பட்டன.
பிரித்தானியத் தமிழர்கள் பெருமளவில் இதில் பங்கேற்று, தமிழர் தன்னாட்சி, தேச உரிமை, மற்றும் தாயக பாதுகாப்பு குறித்த தங்களின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.

இந்தப் போராட்டம், சர்வதேச அரங்கில் தமிழர் உரிமை கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைப்பதற்கான ஒரு வலுவான பதிவாக அமைந்தது.





