சுவிஸ் மற்றும் கனடாவில் வேலைவாய்ப்பு – இருவர் அதிரடியாக கைது!
கனடா மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இதன்படி முதலாவதாக வராக்காபொலவில் ஓய்வுபெற்ற தோட்ட மேலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கனடாவில் பண்ணைகளில் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பலரிடம் இருந்து 52 மில்லியன் பணத்தை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தலா 13 மில்லியன் ரூபாயை பெற்றுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் அவரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து சைப்ரஸ் வேலை வாய்ப்புகள் தொடர்பான மூன்று ஒப்பந்தங்களையும் அதிகாரிகள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் வாரக்கபொல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் சுவிட்சர்லாந்தில் வேலைவாய்பை பெற்றுத்தருவதாக 1.7 மில்லியன் ரூபாயை மோசடி செய்த நபர் ஒருவர் கொழும்பில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், அதிகாரிகள் அவரை அவரது பணியிடத்தில் வைத்து கைது செய்யததாக உறுதிப்படுத்தியுள்ளனர். அவர் களுத்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் பல முறைப்பாடுகள் வருவதாகவும், மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான மோசடிகளை அறிவிக்க 011 288 2228 என்ற ஹாட்லைன் மூலம் தெரிவிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.





