வடகிழக்கில் தொழில்பயிற்சி மையங்கள்: சபையில் கோரிக்கை முன்வைப்பு!
“ வடக்கு, கிழக்கில் தொழில்பயிற்சி மையங்களை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ இலங்கையானது உற்பத்தி பொருளாதாரத்தில் தன்னிறைவடைய வேண்டும். அவ்வாறு அடைந்தால் ஏற்றுமதி செய்யக்கூடிய நிலை உருவாகும். இதற்கு தொழிற்பயிற்சி என்பது மிக முக்கியமாகும். எனினும், வடக்கு, கிழக்கு பகுதிகளில் தொழில் பயிற்சியென்பது இல்லாத நிலை காணப்படுகின்றது. எனவே, தொழில் பயிற்சி மையங்களை அமைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
முதலீட்டுக்கு சாதகமான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். முதலீட்டு வலயங்களை உருவாக்க வேண்டும். உற்பத்தி செலவை குறைக்க வேண்டுமானால் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். எனவே, பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம், தலைமன்னார் துறைமுகம் என்பவற்றை அரசாங்கம் அபிவிருத்தி செய்ய வேண்டும்.
இந்தியா நன்கொடையாக வழங்கவுள்ள 20 ஆயிரம் மில்லியன் ரூபாவை இதற்காக பயன்படுத்த வேண்டும்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.





