அறகலயவின்போது நடந்தது என்ன? முன்னாள் சபாநாயகர் பகீர் தகவல்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேறி 12 மணிநேரத்துக்கு பின்னரே அது பற்றி எனக்கு தெரியவந்தது என முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
அறகலய காலகட்டம் தொடர்பில் விவரிக்கையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் முன்னாள் சபாநாயகர் மேலும் கூறியவை வருமாறு,
“ பங்களாதேசில் போராட்டம் நடந்தது , ஆயிரத்து 400 பேர்வரை கொல்லப்பட்டனர். ஆனால் இலங்கையில் ஆட்சியில் இருந்த கோட்டாபய ராஜபக்ச அவ்வாறு செய்யவில்லை. அவர் ஜனநாயகத்தை ஏற்றார். நாட்டை விட்டு வெளியேறினார்.
அவர் இவ்வாறு சென்று 12 மணிநேரத்துக்கு பின்னரே அது பற்றி எனக்கு தெரியும். அதுவரையில் நாட்டில் ஜனாதிபதியொருவர் இருக்கவில்லை. நிர்வாகம் யாரின் கைகளில் என தெரியவில்லை. யார் எங்கிருக்கின்றனர் என்பது புரியாது இருந்தது. ரணில் விக்கிரமசிங்கவும், ஜீ.எல்.பீரிசும் மட்டுமே என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர்.
நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானித்தேன். 3 எம்.பிக்களை தொடர்புகொண்டேன். அவர்கள் உயிருக்கு உத்தரவாதம் கோரினர். கடைசியில் நாடாளுமன்றத்தை கூட்ட முடியாமல்போனது.
இக்காலப்பகுதியில் ஜனாதிபதி இருக்கவில்லை, பிரதமர் இருக்கவில்லை. அமைச்சரவை இருக்கவில்லை. சபாநாயகர் என்ற வகையில் எனக்கு மட்டுமே பதவி இருந்தது. முப்படை தளபதிகள் எனது வீட்டுக்கு வந்தனர். எனக்கு உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என கூறினேன். இதற்கிடையில் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டையும் எரித்து விட்டனர்.” என்றார் முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன.
அத்துடன், இக்காலக்கட்டத்தில் எனக்கு பல்வேறு அழுத்தங்கள் இருந்தன. எவரும் ஆட்சியை பொறுப்பேற்க முன்வரவில்லை. சில சம்பவங்களை வெளிப்படையாக குறிப்பிட முடியாது எனவும் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.




