என்.பி.பி. அரசுக்கு எதிரான முதல் “அரசியல் தாக்குதல்” நாளை: தெற்கு அரசியலில் பெரும் பரபரப்பு!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக சில எதிர்க்கட்சிகள் இணைந்து முன்னெடுக்கவுள்ள பேரணி கூட்டம் நாளை (21) நுகேகொடையில் இடம்பெறவுள்ளது.
இக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ள நிலையில், நாட்டில் பல பகுதிகளில் உள்ளவர்கள் நுகேகொடை அழைத்துவரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஓராண்டு கடந்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியே இப்போராட்டம் நடத்தப்படுகின்றது என்று ஏற்பாட்டாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
அத்துடன், அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல், அடக்குமுறை என்பவற்றுக்கு எதிராகவும் நடவடிக்கை இடம்பெறும் எனவும் அறிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சிகள் கூட்டணைந்து மாபெரும் மக்கள் குரல் என்ற தொனிப்பொருளின்கீழ் கூட்டத்தை நடத்தினாலும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இதில் பங்கேற்கவில்லை.
நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியும் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளது. மலையக கட்சிகளும் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என அறிவித்துள்ளன.
விமல்வீரசன்ச, சம்பிக்க ரணவக்க, திலீத் ஜயவீர உள்ளிட்ட கட்சி தலைவர்களும் பங்கேற்கமாட்டார்கள்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, பிவிதுரு ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகளும், அவற்றுக்கு சார்பான அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் பங்கேற்கவுள்ளன.





