ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, 16.6 மில்லியன் ரூபாய் அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று சட்டமா அதிபர் கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரவிடம் தெரிவித்தார்.
அதன் பின்னர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் நேற்று அறிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இந்த நிலைப்பாட்டை தெரிவித்தார்.
சமன் ஏக்கநாயக்க வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏக்கநாயக்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் கலிங்க இந்திஸ்ஸ, தற்போது வெளிநாட்டில் உள்ள தனது கட்சிக்காரரின் மகள் பிரசவத்தை எதிர்பார்த்துள்ளதாகவும், அவருடன் இருக்க தனது கட்சிக்காரர் பயணம் செய்ய வேண்டியுள்ளதாகவும் கூறினார்.
எனவே பயணத் தடையை நீக்குமாறு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நிலையில் ரணிலின் விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.





