வடக்கில் காணிகளை விடுவிக்க கூடாது: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
” வடக்கில் காணி பிரச்சினை இருக்கின்றதென்பதை ஏற்கின்றோம். எனினும், காணி விடுவிப்பின்போது தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கியே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.” என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இவ்வாறு வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ பொருளாதாரத்துக்கு தேசிய பாதுகாப்பு எவ்வளவு முக்கியத்துவம் என்பதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிந்து வைத்துள்ளதா என்பது சந்தேகமே. ஆழம் அறியாது நீரில் நடந்து செல்வதுபோல்தான் பாதுகாப்பு விடயத்தில் அரசாங்கம் செல்படுகின்றது.
30 வருடகால போரால் பாதிக்கப்பட்டவர்கள் நாம். மூவின மக்களும் பாதிக்கப்பட்டனர். ஆனால் போர் முடிந்துவிட்டது என கூற முடியாது. ஏனெனில் என்றாவது ஒருநாள் அது ஏற்படக்கூடும். எனவே, எச்சரிக்கையுடன்தான் செயல்பட வேண்டும்.
வடக்கில் காணி பிரச்சினை உள்ளது. தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கியே இப்பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் மிக்க இடம் இருந்தால் இடம் உரிமையாளருக்கு மாற்று இடம் வழங்கலாம் அல்லது உரிமையாளர் திருப்தி அடையக்கூடிய இழப்பீட்டு தொகையை வழங்கலாம். இதைவிடுத்து வடக்கில் வாக்குகளை மட்டும் இலக்கு வைத்து முடிவுகள் எடுக்கப்படக்கூடாது.” –என்றார் நளின் பண்டார் எம்.பி.





