துருக்கியில் உயிரிழந்த ஜேர்மன் குடும்பம் – விசாரணையில் வெளியான திருப்பம், 16 பேர் கைது!
துருக்கியில் உயிரிழந்த ஜெர்மனிய குடும்பத்தின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெர்மனியில் இருந்து விடுமுறையை கழிப்பதற்காக தம்பதியர் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் துருக்கிக்கு விஜயம் செய்திருந்தனர்.
அப்போது ஓர்டகோய் (Ortakoy) தெருக்கடையில் இருந்து சில உணவுகளை சாப்பிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கடுமையாக நோய்வாய்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை இரு குழந்தைகள் உயிரிழந்தனர். மறுநாள் தாயார் உயிரிழந்தார். பல நாட்களாக தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தை நேற்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த இஸ்தான்புல் வழக்கறிஞர்கள் முதலில் உணவு விஷமானமை தொடர்பில் கவனம் செலுத்தினர்.
இருப்பினும் அவர்கள் தங்கியிருந்த விடுதியில் பூச்சிக்கொல்லிகளுக்கு ஆளாகியிருக்கலாம் என்பதற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விடுதியின் தரை தளத்தில் உள்ள ஒரு அறையில் படுக்கைப் பூச்சி தொற்றை எதிர்த்துப் போராட ஒரு பொருள் தெளிக்கப்பட்டதாகவும், அது குளியலறையின் திறப்பு வழியாக முதல் மாடியில் உள்ள அவர்களின் அறையை அடைந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
அதனை சுவாசித்த பிறகு அவர்கள் நோய்வாய்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் நகராட்சி அதிகாரிகளால் குறித்த விடுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்பதாக விரிப்புகள், தலையணைகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் போர்வைகளிலிருந்து மாதிரிகளை காவல்துறையினர் கைபற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்தே 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து உணவு விற்பனையாளர்கள், ஹோட்டலின் உரிமையாளர் மற்றும் இரண்டு ஊழியர்கள் மற்றும் பூச்சி கட்டுப்பாடு நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் 08 பேர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





