திருமலை சம்பவத்தை வைத்து அரசியல் நடத்த இடமளியோம்!
திருகோணமலை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு அரசியல் லாபம் தேடுவதற்கு சில குழுக்கள் முற்படலாம். அவ்வாறான சம்பவங்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்குரிய பொறுப்பு பொலிஸாருக்கு உள்ளது. அதற்கமைய அவர்கள் செயற்படுவார்கள்.
எமது நாட்டில் புத்தர் சிலைக்கு சேதம் விளைவிக்கப்பட்டதால் பாரிய குழப்பங்கள் ஏற்பட்ட சம்பவங்களும் உள்ளன. எனவேதான், புத்தர் சிலை அங்கிருந்து அறக்கப்பட்டது. பின்னர் மீள வைக்கப்பட்டது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவே பொலிஸார் தலையிட்டனர்.
திருகோணமலை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு தமது அரசியல் கனவுகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு, மக்களை திரட்டுவதற்கு சில குழுக்கள் முற்படலாம். அவ்வாறான விடயங்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது.” என்றார்.





