சிங்கப்பூர் விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட காண்டாமிருகக் கொம்புகள்!
தென்னாப்பிரிக்காவிலிருந்து ( South Africa) சிங்கப்பூர் விமான நிலையம் வழியாக லாவோஸுக்கு (Laos) கடத்தப்பட்ட விலங்குகளின் எச்சங்கள் இம்மாதத்தின் தொடக்கத்தில் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரின் தேசிய பூங்கா வாரியம் (NParks) மற்றும் விமான சரக்கு கையாளுபவர் SATS இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சுமார் 35.7 கிலோ எடைக்கொண்ட காண்டாமிருகக் கொம்புகளை கடத்த முற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
குறித்த பொதியில் சுமார் S$1.13 மில்லியன் (US$870,000) மதிப்புள்ள இருபது காண்டாமிருகக் கொம்புகளும், எலும்புகள், பற்கள் மற்றும் நகங்கள் உட்பட 150 கிலோ எடையுள்ள பிற விலங்கு பாகங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது சிங்கப்பூரில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட மிகப் பெரிய விலங்கு எச்சங்களை குறிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
SATS சரக்கு ஏற்றுக்கொள்ளும் உறுப்பினரான வெங்கடேஸ்வரன் லெட்சுமணன் சோதனைகளின் போது பொட்டலத்திலிருந்து கடுமையான வாசனை வருவதை கவனித்ததை தொடர்ந்து முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தியதாக தெரிவித்தார். இதன்போதே குறித்த எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
20 கொம்புகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்தவை என்றும் வெள்ளை காண்டாமிருக இனத்திலிருந்து வந்தவை என்றும் தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் எஞ்சிய எச்சங்களை அடையாளம் காணும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும், அதிகாரிகள் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் குறித்து இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





