350 வகையான மருந்துகளுக்கு விலை குறைப்பு!
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) 350 வகையான மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலைகளை இன்று அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு அத்தியாவசிய சிகிச்சைகள் மிகவும் மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட NMRA தலைவர் டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள் உட்பட பல முக்கியமான மருந்துகளின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
எடுத்துக்காட்டாக, புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பக்லிடாக்சல் (Paclitaxel) குப்பியின் விலை 42,000 இருந்து 26,332.29 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட மருந்துகளுக்கும் உரிம புதுப்பிப்புகளுக்கும் புதிய கட்டுப்பாட்டு விலைகள் பொருந்தும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“பொதுமக்கள் தாங்கள் வாங்கும் மருந்துகளின் விலைகளைச் சரிபார்க்க உரிமை உண்டு, மேலும் மருந்தகங்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட விகிதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.





