நுகேகொடை பேரணிக்கு ஆள் சேர்க்கும் நாமல் – அரசாங்கத்திற்கு எதிரானவர்களுக்கு அழைப்பு!
தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதிகளையும் தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனவே, அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் 21 ஆம் திகதி நுகேகொடைக்கு வந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. உருளைக்கிழங்கு விவசாயிகள், பூசணி விவசாயிகள் மற்றும் வெங்காய விவசாயிகளுக்கு செய்யப்பட்ட அநீதிக்கு அந்த மக்கள் அரசாங்கத்தை வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.
இப்போது அந்த மக்கள் வீதிகளில் இறங்கினர். அரசாங்கம் பட்டதாரிகளுக்கு மிகப்பெரிய அநீதியைச் செய்துள்ளது. இந்த நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியவில்லை.
இந்த அரசாங்கத்தின் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் பயப்படவில்லை. அரசாங்கத்தின் பொய்யான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்ட அனைத்துக் கட்சிகளும் 21 ஆம் திகதி நுகேகொடையில் எங்களுடன் சேர்ந்து அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.





