அமெரிக்கக் கடல் எல்லையில் பரபரப்பை ஏற்படுத்திய ரஷ்ய இராணுவக் கப்பல்
அமெரிக்காவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் பதற்ற நிலை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் கரேலியா என்ற ரஷ்ய உளவுக் கப்பல் காணப்பட்டதாக அமெரிக்கக் கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த 29ஆம் திகதி முதன்முதலாக ஓஹு தீவிலிருந்து தெற்கே சுமார் 15 கடல் மைல் தொலைவிலுள்ள அமெரிக்கப் பிராந்திய நீர்நிலைகளுக்கு அண்மித்த பகுதியில் அது தென்பட்டது.
உடனடியாக HC-130 ஹெர்குலஸ் விமானத்தையும், கட்டர் வில்லியம் ஹார்ட் (Cutter William Hart) கப்பலையும் ரஷ்யக் கப்பலுக்கு அண்மித்த பகுதியில் அமெரிக்கக் கடற்படை நிலைநிறுத்தியது.
அமெரிக்காவின் கடற்பிராந்தியங்களைப் பாதுகாக்கும் நோக்கில் எந்தவொரு வெளிநாட்டுக் கப்பலும் உள்நுழைந்தால் கண்காணிக்கப்படுவதாக, அமெரிக்கக் கடலோர காவல்படை செயல்பாட்டு மையத்தின் தலைவர் மேத்யூ சோங் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு இராணுவக் கப்பல்கள் கடற்பிராந்தியத்தில் இருந்து 12 கடல் மைல்களுக்கு அப்பால் பயணிக்க சர்வதேசக் கடற்பாதுகாப்புச் சட்டம் அனுமதிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் இராணுவக் கப்பல் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்ற நிலையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





