ஜெர்மனியில் H5N1 பறவைக் காய்ச்சல் உறுதி – அமுலாகும் கட்டுப்பாடுகள்
ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் உள்ள காட்டுப் பறவைகளில் H5N1 எனப்படும் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நோய் பரவுவதைத் தடுக்க நகரம் புதிய பாதுகாப்பு விதிகளை அறிவித்துள்ளது.
மேலும் எதிர்வரும் 18ஆம் திகதி முதல், பிராங்பேர்ட்டில் உள்ள அனைத்துக் கோழிகளையும் வீட்டிற்குள் அல்லது சிறப்பு பாதுகாப்பு உறைகளுக்குக் கீழ் வைத்திருக்க வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பண்ணைப் பறவைகளைப் பாதுகாக்கவும், தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுக்கவும் நகரம் விரும்புவதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கோழிகள், வாத்துகள் மற்றும் பிற பறவைகளை, கொட்டகைகள் அல்லது மூடப்பட்ட பகுதிகளுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதே விதியாகும். அத்துடன், கோழி உரிமையாளர்களும் சுகாதார விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
பாதுகாப்பு ஆடைகளை அணிவது, தீவனத்தைப் பாதுகாப்பாகச் சேமிப்பது மற்றும் கொட்டகைகளுக்குள் நுழைவதற்கு முன்பு சரியாகச் சுத்தம் செய்வது போன்றவை அவர்கள் பின்பற்ற வேண்டிய விதிகளாகும்.
மேலும், கோழிச் சந்தைகள், பறவைக் கண்காட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பறவைகளைக் கொண்டு செல்வதையும் நகரம் தடை செய்துள்ளது.
இது வைரஸ் மேலும் பரவாமல் இருப்பதை உறுதி செய்யும் என்று சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.





