இந்தியாவில் அதிர்ச்சி – மூன்று வீடுகளில் தீப்பரவக் காரணமாகிய காகம்
இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் காகத்தின் செயலால் 3 வீடுகள் தீப்பிடித்து எரிந்துள்ளன.
நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட இந்த அனர்த்தம் காரணமாக ஒரு வீடும், அதனை அண்மித்த மூன்று குடிசைகளும் முற்றிலுமாக எரிந்து தீக்கிரையாகின.
வீடொன்றில் மேல் மாடியில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கினை காகம் ஒன்று தூக்கிச் செல்ல முற்பட்ட வேளையில், அது தவறி விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே அந்த வீடும் அதைச் சுற்றியிருந்த மூன்று குடிசைகளும் தீப்பிடித்து எரிந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இச்சம்பவத்தில், குத்தகை விவசாயி ஒருவரின் வீடு தீக்கிரையாகியுள்ளது. மேலும், அவர் கடனாக வாங்கி வைத்திருந்த ஒரு இலட்சம் ரூபாய் பணமும் தங்க நகைகளும் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.





