பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ட்ரோன் – ஆயுதங்களைத் குறி வைக்கும் மர்மம்
பிரான்ஸில் மர்ம ட்ரோன்கள் பறந்ததால் பரபரப்பு நிலைமை ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ட்ரோன்கள் பறந்த நிலையில், அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு, துலூஸ் பகுதியிலுள்ள காவல் நிலையத்தை அண்மித்த பகுதியில் ட்ரோன் எனும் ஆளில்லா விமானம் பறந்துள்ளது.
அந்த நேரத்தில் கவச வாகனங்களை ஏற்றிய ஒரு சரக்கு ரயில் அப்பகுதியைக் கடந்து சென்று கொண்டிருந்தது.
இதன்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் குழுவினர் முதலில் இந்தச் சந்தேகத்திற்கிடமான ட்ரோனை அடையாளம் கண்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த 10 ஆம் திகதி, ஐரோப்பாவின் மிகப் பெரிய துப்பாக்கி மருந்துத் தயாரிப்புத் தொழிற்சாலையும், பிரெஞ்சு இராணுவத்துக்கு வெடிமருந்து தயாரிக்கும் திறன் கொண்ட பெர்ஜெராக் (Bergerac) என்னுமிடத்தில் அமைந்துள்ள யூரென்கோ தொழிற்சாலை மீது ட்ரோன் ஒன்று வட்டமிட்டது.
இந்நிலையில் மீண்டும் அதே தொழிற்சாலை மீது மர்ம ட்ரோன் வட்டமிட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ட்ரோனின் உரிமையாளர் குறித்து இதுவரை தகவல் இல்லை.
அண்மைக் காலமாக டென்மார்க், சுவீடன், ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் மீதும் ட்ரோன்கள் பறந்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் ட்ரோன் பறப்பதால் விமான சேவைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பா மீது ரஷ்யா போர் தொடுக்கும் என்ற அச்சம் நீடித்து வரும் நிலையில், இந்த ட்ரோன் பறப்பதன் பின்னணியில் புட்டின் உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





