துருக்கியில் முடி மாற்று சிகிச்சை – பிரித்தானியருக்கு காத்திருந்த அதிர்ச்சி
துருக்கிக்குச் சுற்றுலா சென்ற 36 வயதான பிரித்தானிய நாட்டவர் ஒருவர், முடி மாற்று அறுவைசிகிச்சை மற்றும் பல் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
நான்கு மாதங்களில் துருக்கியில் சிகிச்சையின் பின்னர் பதிவான இரண்டாவது மரணச் சம்பவம் இதுவாகும்.
அந்த நபர் முதலில் இஸ்தான்புல்லின் புல்யா மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் முடி மாற்று அறுவைசிகிச்சை மேற்கொண்டார். மறுநாள், நகரின் அயாஸ்கா அருகே பல் சிகிச்சை பெற்றார்.
சிகிச்சைக்குப் பிறகு, சிஸ்லி மாவட்டத்தில் உள்ள தனது ஹோட்டலுக்குத் திரும்பிய அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் செரென்டெப் ஹமிடியே எட்பால் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எனினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மரணம் குறித்து துருக்கிய அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர். எனினும் மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.
துருக்கி, மலிவு விலை மற்றும் தரமான சேவைகளால் முடி மாற்று அறுவை சிகிச்சைக்கு உலகளவில் பிரபலமான இடமாக உள்ளது. உலகளாவிய முடி மாற்று சுற்றுலா சந்தையில் இது கிட்டத்தட்ட 60 சதவீதம் பங்களிக்கிறது.
இதேவேளை, கடந்த ஜூலை மாதம், 38 வயதான மார்ட்டின் லாச்மேன் என்ற மற்றொரு பிரித்தானிய நாட்டு சுற்றுலாப் பயணி 1,500 பவுண்ட் முடி மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு இஸ்தான்புல்லில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
மலிவான சிகிச்சைக்காக ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் துருக்கிக்கு வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





