ஊடகங்களுக்கு தகவல் வழங்குவதற்கு தடை – பொது பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்!
ஊடகங்களுக்கு தகவல் வழங்குவதற்கு தடை விதிக்கப்படவில்லை. விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலான தகவல்களை வெளியிடக்கூடாது என்றே பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, இது தொடர்பில் பரப்படும் வதந்திகளை நிராகரிக்கின்றோம்.” என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“அரசாங்கத்தை விரட்யடிப்பதற்குரிய முதலாவது வேட்டு நுகேகொடையில் வைக்கப்படும் என அன்று கூறினார்கள். ஆனால் உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்தை நினைவு படுத்துவதற்காகவே பேரணி என இன்று குறிப்பிடுகின்றனர்.
அரசாங்கம் என்ன செய்கின்றது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரமே நாம் செயற்படுகின்றோம். மக்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.
அதேவேளை, தேசிய மக்கள் சக்தி புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுசென்ற தரப்பினரே இன்று பொருளாதாரம் பற்றி கேள்வி எழுப்புகின்றனர்.” எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.





