இது கார்த்திகை மாதம்: வீரமறவர்களை நினைவுகூரும் மாதம்! சபையில் சாணக்கியன் புகழாரம்!
பாலமொன்றை பெறுவதற்காக தமிழ் மக்கள் எமக்கு வாக்களிக்கவில்லை. சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வுக்காகவே இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கிவருகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ தமது அரசியல் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும், அதற்காக சமஷ்டி அடிப்படையிலான தீர்வு அவசியம். இதனை பெறும் நோக்கிலேயே தமிழரசுக் கட்சிக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கிவருகின்றனர்.
இது கார்த்திகை மாதம், வடக்கு, கிழக்கில் எமது விடுதலைக்காக போராடிய வீரமறவர்களை நினைவுகூரும் மாதம். ஆயிரக்கணக்கான போராளிகள் இனத்தின் விடுதலைக்காக இம் மண்ணில் விதைக்கப்பட்டனர். அவர்களை நினைவு கூரும் மாதம்.
எனவே, பாலமொன்றை பெறுவதற்காக எமது ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் தியாகம் செய்யவில்லை. ஒரு பொறுப்புள்ள கட்சி என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றி சிந்தித்து முடிவெடுக்க கூடிய உரிமை எமது கட்சிக்கு உள்ளது.” எனவும் சாணக்கியன் குறிப்பிட்டார்.





