சிங்கப்பூரில் போலி டிஜிட்டல் அடையாள அட்டை மோசடி குறித்து மக்கள் எச்சரிக்கை
சிங்கப்பூரில் போலி டிஜிட்டல் அடையாள அட்டைகளை வைத்து புதிய மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாகக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடைமுறையில் இருக்கும் நிஜமான அடையாள அட்டையைப் போன்றே போலியான அடையாள அட்டைகளை மோசடியாளர்கள் தயாரிக்கின்றனர்.
அதைக் கொண்டு பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றில் புதிய வங்கிக் கணக்குகளைத் தொடங்க முயற்சிப்பது பிரதானமானது என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த மோசடி குறித்து அனைத்து வங்கிகளுக்கும் சிங்கப்பூர் நாணய வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, வாடிக்கையாளர்களின் அடையாளத்தை உறுதி செய்ய நிறுவனங்கள் சிங்பாஸ் சேவையைப் பயன்படுத்துமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தனிப்பட்ட அடையாள ஆவணங்களைப் பகிரும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களுடன் எந்தவொரு ஆவணங்களையும் பகிர வேண்டாம் எனப் பொது மக்களுக்குக் காவல்துறையினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.





