ஏழைகளின் வயிற்றில் அடிப்பு: செல்வந்தர்களுக்கு நிவாரணம்!
ஏழைகளிடமிருந்து வரி வசூலித்து, செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடைமுறையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு- செலவுத் திட்டத்திலுள்ள விடயங்களில் குறைந்தபட்சம் 50 சதவீதத்தையேனும் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
செல்வந்தர்களிடமிருந்து பெற்று ஏழைகளுக்கு வழங்கும் நிலையை மாற்றி, ஏழைகளின் வயிற்றில் அடித்து, செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடைமுறையை அரசாங்கம் கைவிட வேண்டும்.
2026 ஆம் ஆண்டுக்குரிய வரவு- செலவுத் திட்டத்தை சர்வதேச நாணய நிதியம் தயாரித்ததா அல்லது ஜனாதிபதி தயாரித்தாரா என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியாது. ஆனால் ஏழைகளுக்கு வரி விதித்து, செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடைமுறை இடம்பெறுகின்றது என்பது தெரிகின்றது. இது நிறுத்தப்பட வேண்டும்.” எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.





