ரஷ்ய பொருளாதாரத்தில் ஏற்பட்ட திடீர் சரிவு – கடும் நெருக்கடியில் புட்டின்
உக்ரைனுக்கு எதிரான போர் காரணமாக ரஷ்யாவின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை ரஷ்ய மத்திய வங்கியின் தலைவர் எல்விரா நைபுல்லினா (Elvira Nabiullina) விடுத்துள்ளார்.
ரஷ்யாவின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வேகமாக வீழ்ச்சி அடைந்து வருவதாக மத்திய வங்கி மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து மூன்று காலாண்டுகளுக்குப் பின்னர் ரஷ்யாவின் வளர்ச்சி குறையும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில், புட்டின் அரசாங்கத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டை விட 0.6 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. இது கடந்த காலாண்டுகளில் 1.1 மற்றும் 1.4 சதவீதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி -0.5 முதல் +0.5 சதவீதம் வரை சுருங்கக்கூடும் என்று மத்திய வங்கி எதிர்பார்க்கிறது. இது, 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குப் பின்னர் ஏற்படும் முதல் சரிவாகும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை, ரஷ்யாவின் தொழிலாளர் சந்தை தொடர்ந்தும் குறைந்து வருகிறது. பணவீக்கம் நான்கு சதவீதத்திற்கும் அதிகமாக நீடிக்கிறது. அதற்கமைய மத்திய வங்கி தனது முக்கிய வட்டி விகிதங்களை 17.5 சதவீதம் என்ற மட்டத்திலேயே வைத்திருக்க முடிவு செய்துள்ளது.
ரஷ்யாவிலுள்ள பெரும்பாலான நிறுவனங்கள், வணிகப் பங்காளர்களிடமிருந்து தாமதமான பணம் செலுத்துதல், தேவை குறைந்து வருதல், மற்றும் பணி மூலதனப் பற்றாக்குறை, போன்ற காரணிகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த மூன்றாண்டுகளாக உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், உலக நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை புட்டினுக்கு எதிராக விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





