புலம்பெயர் தொழிலாளர்களை சுரண்டும் மலேசிய நிறுவனங்களுக்கு எதிராக போராட்டம்!
மலேசிய நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்ட சுமார் 100 வங்காளதேசத் தொழிலாளர்கள் இன்று போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் (Dhaka) உள்ள வெளிநாட்டினர் நலன் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஊதியம் வழங்கப்படாமை, நியாயமான இழப்பீடு மற்றும் மலேசிய முதலாளிகளால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகக் கூறி அவர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
மலேசியாவின் பிரபல நிறுவனமொன்றில் ஏறக்குறைய 431 தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில் அந்நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலேசியா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள பல தொழிற்சாலைகள், உற்பத்தி, தோட்ட வேலைகள் அல்லது கட்டுமான தொழில் நடவடிக்கைகளுக்கு பெரும்பாலும் வங்கதேசம், மியான்மர் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





