மீண்டும் நெருக்கடி அபாயம்! – அந்நியச் செலாவணி கையிருப்பு குறித்து விமல் எச்சரிக்கை
அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நாட்டில் மீண்டும் நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“தேசிய மக்கள் சக்தி ஆட்சியை பொறுப்பேற்கும்போது அந்நிய செலாவணி கையிருப்பு 6 பில்லியனுக்கு அண்மித்தாகவே இருந்தது. தற்போதும் அதே அளவுதான் உள்ளது. எனினும், 2027 ஆம் ஆண்டாகும்போது இந்த எண்ணிக்கை 15 பில்லியனாக வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை முன்வைத்துள்ளது.
இந்த இலக்கை நோக்கி அரசாங்கம் எவ்வாறு நகரும்? சுற்றுலாத்துறையை மட்டும் நம்பி இருக்க முடியாது. உரிய வேலைத்திட்டங்கள் அவசியம்.
2028 ஆம் ஆண்டில் வெளிநாட்டு கடன் செலுத்தலை மீள ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் கடன் செலுத்த முடியாத, வங்குரோத்து நிலை மீண்டும் ஏற்படக்கூடும்.” என விமல் வீரவன்ச மேலும் குறிப்பிட்டார்.





