படிம எரிபொருள் பயன்பாட்டால் பூமிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! பிரேசில் ஜனாதிபதி எச்சரிக்கை
படிம எரிபொருள்களின் பயன்பாடு தொடர்பில் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (Luiz Inácio Lula da Silva) கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
படிம எரிபொருள்களின் அதிதீவிர பயன்பாட்டை பூமி நீண்ட காலத்துக்குத் தாங்கிக் கொள்ளாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
படிம எரிபொருளை நம்பியிருப்பதை நிறுத்த வேண்டும் என ஏற்கனவே உலக நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
இந்த இணக்கப்பாட்டை விரைந்து அமல்படுத்த வேண்டும் என பிரேசில் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 200 ஆண்டுகளாக உலக நாடுகள் படிம எரிபொருளைச் சார்ந்தே இருந்துள்ளன.
எரிசக்தி பயன்பாடு தொடர்பில் நாடுகள் எடுக்கும் நடவடிக்கையைப் பொறுத்தே பருவநிலை மாற்றத்தைக் கையாளும் முயற்சியில் முன்னேற்றம் கிடைக்கும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டுக்கான பருவநிலை மாநாட்டை பிரேசில் ஏற்று நடத்தவுள்ள நிலையில் ஜனாதிபதி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த மாநாட்டில், பசுமை எரிசக்திக்கு மாறும் நடைமுறைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படவுள்ளது.





