சூரியனுக்குள் அழிந்து போகவுள்ள பூமி – விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
பிரபஞ்சத்தின் சுழற்சிக்கு ஏற்பச் சூரியனும் ஒரு நாள் அழிந்து போகும் எனச் சூப்பர் கணினி கட்டமைப்பு மூலம் நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சுமார் 500 கோடி ஆண்டுகளுக்குப் பின்னர் சூரியன் அழிந்து போகும் என நாசா தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் சூரியனில் எரிபொருள் தீர்ந்து, அது வீங்கிப் பெரிதாகி, சிவப்புப் பூதம் (Red Giant) என்ற புதிய வடிவம் எடுக்கும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சூரியனுக்கு ஏற்படும் இந்தப் பாதிப்பு, பூமிக்கு முன்னதாகவே ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சிவப்புப் பூதமாக மாறிய சூரியனின் பிரகாசம் அதிகரிக்கும். இந்த அதீத வெப்பம் பூமியின் கடல்களைக் கொதிக்க வைத்து, நீரை வற்றச் செய்யும். இதன் விளைவாகப் பூமி ஒரு உயிரற்ற, சுட்டெரிக்கும் வறண்ட பாலைவனமாக மாறும் என விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.
சூரியனில் ஏற்படும் பிரபஞ்ச மாற்றம் காரணமாக ஹைட்ரஜன் எரிபொருள் தீர்ந்துவிடும். இதன் காரணமாகச் சூரியன் அதன் அளவைவிட 100 முதல் 150 மடங்கு பெரிதாக வீங்கத் தொடங்கும். இந்த விரிவாக்கத்தின்போது, புதன் மற்றும் வெள்ளி கிரகங்களைச் சூரியன் விழுங்கும்.
அதேவேளை, இந்த மாற்றங்கள் காரணமாக பூமியும் சூரியனின் நெருப்புக் குழம்புக்குள் காணாமல் போக அதிக வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
வீங்கிய ராட்சத வடிவத்துக்குப் பிறகு, சூரியன் தனது வெளிப்புற அடுக்குகளை (Planetary Nebula) விண்வெளியில் வீசியெறியும். அதன் பிறகு, ஒளியை இழந்த, சுருங்கிய மையக்கரு மட்டும் வெள்ளைக் குள்ளன் (White Dwarf) என்ற பெயரில் எஞ்சி நிற்கும்.
அதேவேளை, சூரியனால் வீசியெறியப்படும் பொருட்கள் விண்வெளியில் புதிய நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் உருவாகக் காரணமாக அமையலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.





