அமெரிக்க இராணுவத் தளத்திற்கு வந்த மர்மப் பொதியைத் திறந்தவர்களுக்கு அதிர்ச்சி (Update)
அமெரிக்க இராணுவத் தளமான மேரிலாந்தில் உள்ள ஆண்ட்ரூஸ் படைத் தளத்திற்கு (Joint Base Andrews) வந்த மர்மப் பொதி காரணமாக பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
அந்தப் பொதியில் இருந்த அடையாளம் தெரியாத வெள்ளைப் பொடி காரணமாகவே பல வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் ஏழு பேர் நோய்வாய்ப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து தளத்திலிருந்த இரண்டு கட்டிடங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் செய்தித் தொடர்பாளர் ஒருவர் சிபிஎஸ் செய்தி நிறுவனத்திடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
தலைநகர் வாஷிங்டனில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தப் படைத் தளத்தில், ஒரு பொதியைத் திறந்து கையாண்ட வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்த நிலை ஏற்பட்டது.
வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் இந்தப் பொதி கண்டுபிடிக்கப்பட்ட கட்டிடமும், அதனுடன் இணைந்த மற்றுமொரு கட்டிடமும் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டன. மேலும், அப்பகுதியைச் சுற்றிப் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டது.
உடல்நலக் குறைவு ஏற்பட்ட அனைவரும் சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது முழுமையாக உடல் நலம் தேறியுள்ளதாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி மற்றும் முக்கிய பிரமுகர்களின் விமானச் சேவைக்கான முக்கிய இடமாக இந்தப் படைத் தளம் விளங்குவதால், மர்மப் பொதி விவகாரம் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
எனினும், இந்த மர்மப் பொதியை அனுப்பியவர்கள் யார், அதில் என்ன பொருள் இருந்தது என்பது குறித்து இன்னமும் தகவல் வெளியாகாத நிலையில் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
விசாரணையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





