விண்வெளியில் தத்தளிக்கும் சீன விண்வெளி வீரர்கள்
விண்வெளியில் சிக்கியுள்ள சீனாவைச் சேர்ந்த மூன்று விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
விண்வெளி வீரர்கள் பயணித்த விண்கலத்தில் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் விண்வெளிக்குச் சென்ற குறித்த வீரர்கள், ஏற்கனவே ஆறு மாதங்களுக்கு மேலாக விண்வெளியில் தங்கியுள்ளனர்.
சென் டொங் (Chen Dong), சென் ஸொங்ருய் (Chen Zhongrui), வாங் ஜியே (Wang Jie) ஆகிய மூவரும் நேற்றைய தினம் பூமிக்கு திரும்பத் தயாராக இருந்தனர்.
அவர்களை பூமிக்கு அழைத்து வர வேண்டிய ஷென்ழோ–20 (Shenzhou-20) விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அவர்களின் பயணம் தடைப்பட்டுள்ளது.
அண்டவெளியிலுள்ள விண்கலப் பொருள்கள், விண்கலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கலாம் என சீன விண்வெளி அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் குறித்த மூன்று சீன வீரர்களும் பூமிக்கு திரும்புவதில் சிக்கலில் உள்ளனர். அவர்கள் எப்போது பூமிக்கு திரும்புவார்கள் என்ற தகவலை சீன விண்வெளி அமைப்பு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சேதத்தின் விவரங்கள் அல்லது விண்கலத்தைச் சோதிக்க ஆகும் கால அளவு குறித்து எந்தத் தகவலும் உடனடியாக வெளியிடப்படவில்லை. இதனால் விண்வெளி வீரர்கள் எப்போது பூமிக்குத் திரும்புவார்கள் என்பதில் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது.





