வாகன டயர்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பெரும் அபாயம் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
வாகனங்களுக்குப் பயன்படுத்தும் டயர்கள் காரணமாக மனிதர்களுக்கு பல்வேறு ஆபத்துக்கள் ஏற்படலாம் என ஆய்வொன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வாகன டயர்கள் தேய்மானம் அடையும் போது, சுமார் 50,000 தொன் நச்சுப் பொருட்கள் காற்று, மண் மற்றும் நீரில் கலக்கப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஐரோப்பிய சந்தையில் உள்ள பிரிட்ஜ்ஸ்டோன், மிச்செலின் உள்ளிட்ட ஆறு முக்கிய டயர் தயாரிப்புகளின் கலவை பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதன்போது மொத்தம் 1,954 மூலக்கூறுகள் அடையாளம் காணப்பட்டன.
அவற்றில் 785 மூலக்கூறுகள் “கடுமையான உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களை” ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இவற்றில் புற்றுநோயை உண்டாக்கும், பிறழ்வு அல்லது இனப்பெருக்கத்தைத் தாக்கக்கூடிய 112 பொருட்கள் மற்றும் நீர்வாழ் சூழலுக்கு மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த 111 பொருட்கள் அடங்கும். பென்சீன் போன்ற நச்சுப் பொருட்களும் இதில் உள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டயர்கள் அவற்றின் ஆயுட்காலத்தில் பல கிலோகிராம் இரப்பரை இழக்கின்றன. இந்த இரப்பர் நுண்துகள்களாக உடைந்து காற்றில் மிதக்கின்றன.
இந்த பிளாஸ்டிக் துகள்களில் உள்ள நச்சுப் பொருட்கள் உணவு, பானங்கள் மற்றும் சுவாசிக்கும் காற்று மூலம் அனைத்து உயிரினங்களிலும் படிவதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நச்சுப் பொருட்கள் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் புற்றுநோய், நரம்பியல் கோளாறுகள் மற்றும் சுவாச நோய்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.





