இந்தியாவில் வீடொன்றுக்குள் இரகசியங்களை அம்பலப்படுத்திய தூசி உறிஞ்சும் சாதனம்
இந்தியாவில் வீடொன்றில் பயன்படுத்தப்பட்ட தூசி உறிஞ்சும் சாதனம் (Vacuum Cleaner) மூலம் பல அந்தரங்கத் தகவல்கள் கசிந்துள்ளதாக, வீட்டின் உரிமையாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த சாதனம் தனது வீட்டுத் தகவல்களை ரகசியமாக அதன் உற்பத்தியாளருக்கு அனுப்பியுள்ளதாக டெல்லியை சேர்ந்த ஹரிஷங்கர் நாராயணன் என்பவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் iLife A11 எனும் ஸ்மார்ட் தூசி உறிஞ்சும் சாதனத்தை கொள்வனவு செய்துள்ளார். அந்தச் சாதனம் அசாதாரணமாக அதிக அளவில் தகவல் பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதையும் கவனித்துள்ளார்.
சாதனத்தை ஆய்வு செய்த போது, அது தொடர்ந்து உற்பத்தி நிறுவனத்துக்குத் தகவல்களை அனுப்பிக் கொண்டிருப்பதை கண்டுபிடித்துள்ளார்.
அவரது வீட்டின் முழு வரைபடமும் (Map of his home) இவ்வாறு அனுப்பப்பட்ட தகவல்களில் அடங்கும் என்று நாராயணன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
குறித்த தூசு உறிஞ்சும் சாதனம் உளவு பார்த்தமைக்கான ஆதாரவூர்வமான தகவல்கள் எதுவும் இல்லை. எனினும் அறிவார்ந்த சாதனங்களைப் (Smart Devices) பயன்படுத்தும் பயனீட்டாளர்களின் அந்தரங்கத்துக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சாதனங்களை கொள்வனவு செய்யும் முன், அது தொடர்பான தொழில்நுட்பத்தில் உள்ள அபாயங்களையும், தனிப்பட்ட தகவல்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதையும் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





