பிரான்ஸ், ஜேர்மன் உட்பட 45 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா இன்றி சீனாவுக்குள் நுழைய அனுமதி
ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மன் உட்பட 45 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா இன்றி தமது நாட்டுக்குள் வருவதற்குரிய சலுகையை சீனா நீடித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி முதல் இக்கொள்கை அமுலுக்கு வரும் எனவும், 2026 டிசம்பர் 31 ஆம் திகதிவரை அது நடைமுறையில் இருக்கும் எனவும் சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
32 ஐரோப்பிய நாடுகள் உட்பட 45 நாடுகளுக்குரிய மேற்படி விசா சலுகை காலாவதியான நிலையிலேயே சலுகை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய 30 நாட்கள்வரை விசா இன்றி சீனாவில் இருக்கலாம்.
கொரோனா பெருந்தொற்றால் வீழ்ச்சிகண்ட சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், தமது நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மேம்படுத்துவதற்காகவுமே இதற்குரிய நகர்வை சீனா மேற்கொண்டுள்ளது.
அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு இச்சலுகை வழங்கப்படவில்லை.





