பயணிகளின் உயிர்களுடன் விளையாடிய இந்திய விமானிகளால் பெரும் சர்ச்சை
எயார் இந்தியா (Air India) விமான சேவையைச் சேர்ந்த இரண்டு விமானிகளுக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விதிமுறைகளை மீறி விமானப் பயணங்களில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த சிரேஷ்ட விமானி ஒருவர், தனது ஆங்கில அறிவுத்திறமையை உறுதிப்படுத்தும் உரிமத்தைப் புதுப்பிக்காமலேயே விமானப் பயணங்களில் ஈடுபட்டுள்ளார்.
இந்தச் செயல்பாடு சர்வதேச விமானச் சேவைகளின் கட்டாய விதிமுறை மீறலாகக் கருதப்படுகிறது.
அத்துடன் குறித்த விமானியுடன் துணை விமானியாகச் சேவையில் ஈடுபட்டவர் கட்டாயப் பரிசோதனை ஒன்றில் தேர்ச்சி பெறாதவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயமாக நடத்தப்படும் சோதனையில் அவர் திருப்திகரமாகச் செயல்படவில்லை எனவும், அவர் மீண்டும் பயிற்சி பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனாலும் விதிமுறைகளை மீறி அவர் தொடர்ந்தும் விமானப் பயணங்களில் ஈடுபட்டுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த இரண்டு விமானிகளும் தற்காலிகமாகப் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர், அத்துடன் அவர்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக ஏர் இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானப் பயணிகளின் பாதுகாப்புக் குறித்த விதிமுறைகளை மீறிய சம்பவம் விமானப் போக்குவரத்துத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





