புகலிடக் கோரிக்கைகளுக்கு 04 ஆண்டுகளுக்கு தடை விதிக்கும் ஐரோப்பிய நாடு!
 
																																		நெதர்லாந்தில் பிரதமரை தெரிவு செய்யும் முக்கிய தேர்தலில் கீர்ட் வைல்டர்ஸ் (Geert Wilders) மற்றும் D66 கட்சியின் இளம் தலைவரான ரோப் ஜெட்டன் (Rob Jetten) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தேர்தலில் வெற்றிவாகை சூடுவது யார் என்பதில் கணிப்புகள் ஜெட்டனுக்கு ஆதரவாக உள்ளன. இருப்பினும் கூட்டணி அமைத்தால் மட்டுமே அரசாங்கத்தை அமைக்க முடியும் என்ற நிலை உள்ளது.
மறுபுறம் கீர்ட் வைல்டர்ஸ் (Geert Wilders) மக்களுக்கு வழங்கிய சில வாக்குறுதிகள் அவர் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக புலம்பெயர்வோரை கட்டுப்படுத்துவது தொடர்பில் அவர் வழங்கிய வாக்குறுதி தற்போது பேசுப்பொருளாகியுள்ளது.
கடந்த ஆண்டு நெதர்லாந்தில் 33,760 புகலிட விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன, இது 2023 ஐ விட சற்று குறைவு, பெரும்பாலான புலம்பெயர்ந்தோர் துருக்கி, சிரியா மற்றும் ஈராக்கை சேர்ந்தவர்கள்.
2024 ஆம் ஆண்டின் இறுதியில், தோராயமாக 18 மில்லியன் மக்கள் வசிக்கும் நாடு சுமார் 260,000 அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது. அவர்களில் 120,000 பேர் உக்ரேனியர்களாவர்.
வீட்டுவசதி நெருக்கடியின் மத்தியில் இடம்பெயர்வு குறித்த விரக்தி அதிகரித்துள்ள சூழ்நிலையில் கீர்ட் வைல்டர்ஸின் (Geert Wilders) வாக்குறுதிகள் மக்களை அதிகம் ஈர்த்துள்ளது.
பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால், நெதர்லாந்தில் உள்ள அனைத்து புகலிடக் கோரிக்கைகளையும் நான்கு ஆண்டுகளுக்கு நிறுத்துவதாக உறுதியளித்துள்ளார்.
அனைத்து எல்லைகளையும் மூடுவதாகவும், புகலிட மையங்களை மூடுவதாகவும், குடும்ப மறு ஒருங்கிணைப்பை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும், ஐ.நா. அகதிகள் மாநாட்டை கைவிடுவதாகவும் வாக்குறுதியளித்துள்ளார்.
அத்துடன் அனைத்து உக்ரேனிய ஆண்களும் உக்ரைனுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்றும், சிரியர்கள் தங்கள் சொந்த அல்லது பிற அரபு நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவேளை பொதுத் தேர்தலில் கீர்ட் வைல்டர்ஸின் (Geert Wilders) வெற்றிப்பெற்றால் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படலாம். இது புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
        



 
                         
                            
