ஹிட்லர்போல் செயற்படுகிறாரா ஜனாதிபதி அநுர? ஆளுங்கட்சி கூறுவது என்ன?
 
																																		அரசமைப்பின் பிரகாரமே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்க செயல்பட்டுவருகின்றார். இதனால்தான் அரசமைப்பு மீறல் தொடர்பில் அவருக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டுகூட இல்லை.” என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஹிட்லர்போல செயற்படுகின்றார் எனவும், ஹிட்லரை தோற்கடிப்பதற்காக அன்று ரஷ்யாவும், அமெரிக்காவும் ஒன்றிணைந்ததுபோல எதிரணிகள் ஒன்றுபட வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிடடிந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
” மஹிந்த ராஜபக்சவும், அவரது குடும்பத்தாரும்தான் ஹிட்லர்போல செயற்பட்டனர். ஜனநாயகத்துக்கு சமாதி கட்டி சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்துவதற்கு 18 ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. இதனை சாகர காரியவசம் மறந்துவிட்டார்போலும்.
எமது ஜனாதிபதி அரசமைப்பின் பிரகாரமே செயற்படுகின்றார். நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் சமம். இந்த கோட்பாட்டை நாம் மீறப்போவதில்லை.” எனவும் சுனில் வட்டகல குறிப்பிட்டார்.
 
        



 
                         
                            
