யாழ்ப்பாணத்தில் திடீர் பணக்காரர்கள் மீது பொலிஸார் கிடுக்கிப்பிடி! 8 பேர் மீது வழக்கு
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதச் செயல்கள் மூலம் திடீர் பணக்காரர்களாக மாறிய நபர்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் யாழ்ப்பாண குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
வன்முறைகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் மீற்றர் வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் என பல பிரிவினரை இலக்கு வைத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று வன்முறைகளில் ஈடுபடுதல், மீற்றர் வட்டிக்கு பணம் வழங்கி கடத்திச் சித்திரவதை செய்தல், போதை மாத்திரைகள் விற்பனை மற்றும் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோதச் செயற்பாடுகள் மூலம் சொத்துச் சேர்த்த 8 பேர் முதல் கட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த எட்டு பேரில், ஒருவருக்கு எதிராகப் போதைப்பொருள் கடத்தல் மூலம் சொத்துச் சேர்த்த குற்றச்சாட்டும், எஞ்சிய ஏழு பேருக்கு எதிராக வன்முறைச் செயற்பாடுகள் மூலம் சொத்துச் சேர்த்த குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்பட்ட இந்த எட்டுப் பேரில் ஐவருக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றிலும், மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத முறையில் சொத்துச் சேர்த்தவர்கள் மற்றும் வன்முறைகளை ஒழுங்கமைத்தவர்கள் மீது எதிர்வரும் நாட்களில் சிறப்புப் புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் மேலும் பல முறைப்பாடுகள் வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





