இரு தனித்தனி சோதனைகளில் 19 கோடிக்கு மேல் மதிப்புள்ள போதைபொருளை பறிமுதல் செய்த மும்பை சுங்கத்துறையினர்

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி அனைத்துலக விமான நிலையத்திற்கு ஹாங்காங்கிலிருந்து போதைப்பொருள் கடத்திச் செல்வதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹாங்காங்கிலிருந்து மும்பை வந்த பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் தீவிரச் சோதனை நடத்தினர்.
அந்தச் சோதனையின்போது இரண்டு பயணிகளிடமிருந்து 7.864 கிலோ கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 7.86 கோடி எனத் தெரிவிக்கப்பட்டது.
சந்தேகநபர் இருவரையும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் மற்றொரு சம்பவத்தில் பேங்காக்கிலிருந்து மும்பை சென்ற விமானத்தில் ஒரு பயணியிடமிருந்து ரூ.11.9 கோடி மதிப்பிலான 11.922 கிலோ கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த நபரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.