இறுதிப்போரின்போது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச விசாரணையே வேண்டும்!!

இறுதிப்போரின்போது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உள்ளக பொறிமுறை ஊடாக நீதி கிட்டாது. எனவே, சர்வதேச விசாரணையே வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிட்ட அவர், ” 2009 இறுதிப்போரின்போது வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த மக்கள், புலிகள் சவேந்திர சில்வாவின் அனுமதியுடன் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார்.
இதனோடு சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டியவர்களாக உள்ளனர்.
எனினும், போர் முடிவடைந்து பல வருடங்ககள் கடந்தும் தமிழ் மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. படுகொலை குறித்து கடந்த அரசாங்கமும் விசாரணை செய்யவில்லை, இந்த அரசாங்கமும் விசாரணை முன்னெடுக்கவில்லை. இதன்காரணமாகவே உள்நாட்டு பொறிமுறைமீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.
உள்ளக பொறிமுறைமூலம் குற்றமிழைத்தவர்களை தண்டிக்க முடியாது. எனவேதான் சர்வதேச விசாரணையை கோரி நிற்கின்றோம்” எனக் கூறியுள்ளார்.