மத்தியப் பிரதேசத்தில் கார்பைடு துப்பாக்கியால்(carbide gun) பார்வையை இழந்த 14 குழந்தைகள்

இந்தியாவில் ஒவ்வொரு தீபாவளியின் போதும் பட்டாசுகளில் புதிதாக ஓர் அம்சம் அறிமுகம் செய்யப்படும்.
இந்த ஆண்டு அவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட ‘கார்பைடு துப்பாக்கி’(carbide gun). உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பட்டாசு வெடிக்கும் துப்பாக்கி ஆகும்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த மூன்று நாள்களில் மட்டும் 122க்கும் மேற்பட்ட பிள்ளைகள் கடுமையான கண் காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 14 பேர் பார்வையை இழந்துவிட்டனர்.
அக்டோபர் 18ஆம் திகதி அரசாங்கம் ‘கார்பைடு துப்பாக்கி’ விற்பனை செய்யத் தடை விதித்திருந்தது. இருப்பினும், இந்த விளையாட்டுத் துப்பாக்கிகள் சில கடைகளில் விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிள்ளைகள் பயன்படுத்தியபோது அவை வெடிகுண்டைப்போல் வெடித்தது, பார்வையைப் பறித்ததாகத் தெரிகிறது.சட்டவிரோதமாக இவற்றை விற்பனை செய்ததன் தொடர்பில் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போபால், இந்தூர், ஜபல்பூர், குவாலியர் போன்ற நகரங்களின் மருத்துவமனைகளில் கண் சிகிச்சைக்கான பகுதிகள், இவ்வாறு பாதிக்கப்பட்ட பிள்ளைகளால் நிரம்பி வழிவதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பிள்ளைகளில் சிலர் சமூக ஊடகக் காணொளிகளைப் பார்த்துத் தாங்களே ‘கார்பைடு துப்பாக்கியை’ உருவாக்கியதாக தெரிவித்துள்ளனர்.
இந்தக் கருவி கண்களை நேரடியாகப் பாதிப்பதாகவும் இது வெடிக்கும்போது வெளியாகும் உலோகத் துண்டுகளும் கார்பைடு வாயுவும் விழித்திரையில் நிரந்தர பாதிப்பு ஏற்படுத்துகிறது என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.