இலங்கையில் புதிய கல்விச் சீர்திருத்தம் – பாடப்புத்தகங்களுக்குப் பதிலாகக் கையேடுகள்!

இலங்கையில் புதிய கல்விச் சீர்திருத்தங்களில் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாகக் கையேடுகள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் இதுவரையில் பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களின் காரணமாகவே சில வகுப்புகளுக்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ வழங்கிய தகவலுக்கமைய, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமுலுக்கு வரும் கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் வராத 2 முதல் 5 வரையான மற்றும் 7 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் வழமைபோல வழங்கப்படும்.
எனினும், புதிய கல்விச் சீர்திருத்தங்களின் அடிப்படையில் 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்குப் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக எளிமைப்படுத்தப்பட்ட கற்றல் கையேடுகள் வழங்கப்படும்.
மேலும், புதிய சீர்திருத்தங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கான கற்றல் கையேடுகளும் அச்சிடப்படும் என அவர் குறிப்பிட்டார்.
தற்போது 2 முதல் 5, 7 முதல் 11 ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களும், 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கான கற்றல் கையேடுகளும் அச்சிடப்பட்டு வருகின்றன.
இந்த அச்சிடும் பணிகள் நவம்பர் 15ஆம் திகதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு விநியோகிக்கும் பணி டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவடையத் திட்டமிடப்பட்டுள்ளது.